தமிழகத்தில் 1,300 அங்கன்வாடிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு

தமிழகத்தில் நடப்பாண்டில் 1,300 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்தார்.

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 1,300 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அங்கன்வாடி மையங்களின் கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாநிலம் முழுவதும் குழந்தைகள் மையங்களுக்கான கட்டட வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 54,481 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 42,223 மையங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. மேலும், 5,073 மையங்கள் பிற அரசுக் கட்டடங்களிலும், 7,185 மையங்கள் வாடகைக் கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

சிதிலமடைந்த அங்கன்வாடி கட்டடங்களை அகற்றிவிட்டு, அவற்றுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, ஊரகப் பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக 1,000 புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

அதேபோல், நகர்ப்புற பகுதிகளில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 300 புதிய அங்கன்வாடி கட்டடங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் நடப்பாண்டில் மொத்தம் 1,300 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டட வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், மாவட்ட ஆட்சியர்களின் விருப்ப நிதி மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் கூடுதலாக அங்கன்வாடி மையங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

புதிய கட்டடங்கள் அமைப்பதுடன், ஏற்கனவே செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் தேவையான பழுதுபார்ப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

தருமபுரி மாவட்டம் சின்னக்காம்பட்டி பகுதியில் குழந்தைகள் மையத்துக்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என்ற எம்எல்ஏ சௌமியா அன்புமணியின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதியளித்தார்.