2031-ஐ இலக்காக வைத்து 20 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள்: தமிழக அரசு விரிவான திட்டம்
தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், 2031-ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் 20,000 மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை உருவாக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

சென்னை:
தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், 2031-ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் 20,000 மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை உருவாக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான செயல்திட்டங்களை விரைவுபடுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக, மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் மாவட்டத் தலைமையகங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், தொழிற்பேட்டைகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சார்ஜிங் வசதிகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எளிதில் சார்ஜிங் வசதி கிடைப்பதுடன், தனியார் முதலீடுகளையும் இந்தத் துறையில் ஈர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சார்ஜிங் கட்டமைப்பு வலுப்பெறுவதால், மின்சார வாகனங்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பசுமை ஆற்றல் பயன்பாட்டை விரிவுபடுத்துதல், கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் தூய்மையான போக்குவரத்து அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி செயல்படுத்தப்பட உள்ளது.
2031-ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் இலக்கு நிறைவேறினால், மின்சார வாகன உள்கட்டமைப்பில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
