இந்தியாவில் முதன்முறையாக ‘பொறியியல் உயிரியல்’ படிப்பு அறிமுகம்; 2047-க்குள் உயிரிப் பொருளாதாரத்தில் உலக முன்னணி இலக்கு

இந்தியாவில் முதன்முறையாக ‘பொறியியல் உயிரியல் (Engineering Biology)’ என்ற புதிய கல்விப் பாடப்பிரிவு அறிமுகமாக உள்ளது. அறிவியல், உயிரியல் மற்றும் பொறியியல் துறைகளை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி, மருத்துவ ஆராய்ச்சி, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: இந்தியாவில் முதன்முறையாக ‘பொறியியல் உயிரியல்’ (Engineering Biology) என்ற புதிய கல்விப் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், மருத்துவம் மற்றும் உயிரியல் துறைகளின் ஒருங்கிணைப்புக்கும் இந்தப் புதிய படிப்பு முக்கிய பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார். நிதி ஆயோக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்திய உயர்கல்வி துறையில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமையும் என்றார். இதுவரை இந்தியாவில் இல்லாத இந்தப் பாடத்திட்டம், அறிவியல், உயிரியல் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் கூறினார். மேலும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை விரிவுபடுத்தும் நோக்கில், ஐஐடி (IIT) மற்றும் இந்திய அறிவியல் கழகம் (IISc) உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் மருத்துவப் பள்ளிகளைத் தொடங்குவதற்கான திட்ட முன்மொழிவுகளை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மருத்துவத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், எதிர்காலத்தில் அல்ட்ராசவுண்ட் மற்றும் அதிநவீன எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகள் ரேடியாலஜிஸ்டுகள் மட்டுமல்லாமல், எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் சூழல் உருவாகும் என்றார். இதற்குத் தேவையான திறன் வாய்ந்த மனித வளத்தையும் தொழில்நுட்பச் சூழலையும் இந்தியா இப்போதே உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார். உயிரிப் பொருளாதார (Bioeconomy) துறையில் இந்தியாவை உலகளாவிய முன்னணி நாடாக மாற்றும் நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருவதாகவும், 2047-ஆம் ஆண்டுக்குள் 2.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உயிரிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதோடு, மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பொறியியல் துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் இந்த முயற்சி முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.