3 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 7.39 லட்சம் மாணவர் சேர்க்கை சரிவு: ஆசிரியர்கள், அடிப்படை வசதிகளை அதிகரிக்காமல் முன்னேற்றம் சாத்தியமில்லை – அன்புமணி

சென்னை:
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது கவலைக்குரிய போக்காக இருப்பதாகவும், இதனை அரசு மிகுந்த முக்கியத்துவத்துடன் அணுக வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு (UDISE+) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்த்து மாணவர் எண்ணிக்கை 1.15 லட்சம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். அதில், அரசு பள்ளிகளில் மட்டும் 2.07 லட்சம் மாணவர்கள் குறைந்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக கூறினார்.
2024–25 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 45.10 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், 2025–26ஆம் ஆண்டில் அது 43.03 லட்சமாக சரிந்துள்ளதாகவும், ஒரே ஆண்டில் 2.07 லட்சம் மாணவர்கள் குறைந்திருப்பது அரசு கல்வித்துறைக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2022–23ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் 50.42 லட்சம் மாணவர்கள் இருந்த நிலையில், மூன்று ஆண்டுகளில் மட்டும் 7.39 லட்சம் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த 2015–16ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் 75.52 லட்சம் மாணவர்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்திருப்பது, 11 ஆண்டுகளில் சுமார் 32.49 லட்சம் மாணவர்களையும், 43 சதவீதத்திற்கும் அதிகமான சேர்க்கையையும் இழந்துள்ளதைக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டு மட்டும் 60.26 லட்சத்திலிருந்து 62.03 லட்சமாக, சுமார் 1.77 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 11 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 36.56 லட்சத்திலிருந்து 62.03 லட்சமாக உயர்ந்திருப்பது, அரசு பள்ளிகளில் ஏற்பட்டுள்ள சரிவின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்பட வேண்டும் என்றார்.
அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், ஆசிரியர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதும் இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறினார். பல ஆயிரக்கணக்கான வகுப்பறைகள் ஆசிரியர்களின்றி செயல்படும் சூழலில், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, அரசு பள்ளிகளில் புதிய கட்டிடங்கள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பி, தேவையான இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
