தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள் 950 உயர்வு: மொத்த இடங்கள் 13,999 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மருத்துவக் கல்வியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) கூடுதலாக 950 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 13,999 ஆக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின்படி, நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து 9,911 புதிய எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 1,36,939 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,111 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,800 இடங்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் 25 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழகத்தில், திருவள்ளூர், திருப்பூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், காஞ்சிபுரம் மாவட்டம் மேவளூர்குப்பத்தில் செயல்படும் ஏபிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு புதிதாக 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மாநிலத்தின் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 150 இடங்கள் அதிகரித்து 5,349 எம்பிபிஎஸ் இடங்களாக உயர்ந்துள்ளன. மேலும், 41 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 800 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டதால், அவற்றின் மொத்த இடங்கள் 8,650 ஆக உயர்ந்துள்ளன. இவ்வாறு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்த்து தமிழகம் முழுவதும் 78 மருத்துவக் கல்லூரிகளில் தற்போது 13,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அதிகரித்ததற்கு மாநில அரசின் மருத்துவ உட்கட்டமைப்பு மேம்பாடு, பேராசிரியர்கள் நியமனம், மருத்துவ வசதிகள் விரிவாக்கம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திடம் தேவையான ஆவணங்கள் உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டது முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவக் கல்வித் தரத்தை உயர்த்தவும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மருத்துவக் கட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.