இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் குழுவில் அஷ்வின்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல்களின்படி, அஷ்வின் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் சார்ந்த அதிகாரிகள் இடையே அண்மையில் அமெரிக்காவில் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி தொடர்பான பொறுப்புகள் குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் தனது அனுபவம், ஆட்டத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் தந்திரோபாய அணுகுமுறை ஆகியவற்றால் அஷ்வின் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அனுபவம் எந்த அணிக்கும் கூடுதல் பலமாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, வெளியாகியுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கின்றன.