லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளிக்கலாம்: வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது அல்லது பெறுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக அளிக்கும் வகையில், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

சென்னை: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது அல்லது பெறுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக அளிக்கும் வகையில், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களுடன் அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, லஞ்ச ஒழிப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கோரினாலோ அல்லது சட்டவிரோதமாக பணம் பெற்றாலோ, பொதுமக்கள் உடனடியாக 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார்களை அனுப்ப முடியும். அதேபோல் 044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142 ஆகிய தொலைபேசி எண்களிலும் நேரடியாக தொடர்புகொண்டு புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, இந்த புகார் தொடர்பு விவரங்கள் அனைத்து அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கட்டாயமாக வெளியிடப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் எளிதில் காணக்கூடிய இடங்களில் லஞ்சப் புகார் தொடர்பான தகவல்கள், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள், துறைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான ஆய்வு அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் அரசு சேவைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
