ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சரின் பதவி உடனடியாக பறிக்கப்படும் – முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை
மாநில அமைச்சரவை கூட்டத்தில், ஊழல் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: மாநில அமைச்சரவை கூட்டத்தில், ஊழல் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியின் நம்பகத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்குபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு எதுவும் இருக்காது என்றும், ஊழல் தொடர்பான புகார்களை அரசு மிகுந்த தீவிரத்துடன் அணுகும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்குவோரின் அமைச்சரவைப் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நம்பிக்கையை காக்கும் வகையில், அரசு நிர்வாகம் நேர்மையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதேபோல், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் தேவையற்ற வருகைகளை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளிகளில் கல்விச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் பிரபலமடையும் நோக்கில் பள்ளிகளுக்குச் சென்று வீடியோக்கள் அல்லது ‘ரீல்ஸ்’ உருவாக்குவது போன்ற செயல்களிலும் அமைச்சர்கள் ஈடுபட வேண்டாம் என்றும், பொதுநலனும் நிர்வாக ஒழுக்கமும் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அமைச்சரவை கூட்டத்தில் சில அமைச்சர்களின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது தலைமையிலான அரசு முழுமையான வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் லஞ்சமற்ற நிர்வாகத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதில் அமைச்சர்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
