பிரிக்ஸ் டெல்லி பிரகடனம்: டாலருக்கு செக் முதல் காசா போர் நிறுத்தம் வரை முக்கிய முடிவுகள்

டெல்லியில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதுடெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டது. டாலருக்கு மாற்றாக உள்ளூர் செலாவணி, ஐ.நா. சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாளில், உறுப்பு நாடுகள் இணைந்து ‘புதுடெல்லி பிரகடனத்தை’ ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. உலகளாவிய ஆளுமை அமைப்புகளில் சீர்திருத்தம், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் உள்ளூர் செலாவணிக்கு முக்கியத்துவம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, மத்திய கிழக்கு நிலவரம் மற்றும் காசா போர் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

டெல்லி பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்தியாவின் தலைமையின் கீழ் மக்கள் மையம், மனிதாபிமான அணுகுமுறை, மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்

ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதித்துவத்தை மாற்றியமைத்து, தற்போதைய உலகளாவிய நிலவரத்துக்கு ஏற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசிலின் பங்களிப்பையும், நிரந்தர உறுப்பினர் பதவிக்கான அவற்றின் விருப்பத்தையும் சீனா மற்றும் ரஷ்யா மீண்டும் ஆதரித்துள்ளன.

டாலருக்கு மாற்றாக உள்ளூர் செலாவணி

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாட்டைக் குறைத்து, உறுப்பு நாடுகளின் சொந்த நாணயங்களை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான நோக்கம் டெல்லி பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளது. இது பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

2025 ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மட்டுமின்றி, அதற்கான நிதியுதவி மற்றும் பாதுகாப்பான புகலிடங்களைத் தடுக்கும் உறுதியையும் உறுப்பு நாடுகள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.

மத்திய கிழக்கு மோதல்: கடல்சார் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

மத்திய கிழக்கில் தொடரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் பிரகடனத்தில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தின் கடற்பகுதிகளில் பயணிக்கும் சரக்குக் கப்பல்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பில் மாற்றம் வேண்டும்

திறந்த, வெளிப்படையான மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட உலக வர்த்தக முறைக்கு பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், தன்னிச்சையான வரி உயர்வுகள் மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கைகள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தல்

காசாவில் அமல்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஐ.நா. மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தியுள்ளன. காசா மக்களுக்கு முழுமையான மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு

காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என பிரிக்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன. பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் அல்லது ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பிரகடனம் வலியுறுத்துகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு நீடித்த மற்றும் நியாயமான தீர்வு பேச்சுவார்த்தை உள்ளிட்ட அமைதியான வழிமுறைகள் மூலமே ஏற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தங்கள் தாயகத்துக்குத் திரும்பும் உரிமை ஆகியவற்றுக்கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல” - பிரதமர் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தலைமையானது மக்கள் மையம் மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்தார். மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை இந்தியாவின் முக்கிய முன்னுரிமைகள் என்றும் அவர் கூறினார்.

பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகளை மக்களுடன் நேரடியாக இணைக்கும் வகையில் சுமார் 30 நகரங்களில் 350-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் மோடி தெரிவித்தார்.

“நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல; அனைவருடனும் இணைந்து முன்னேற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்ற நிலைப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தினார். அடுத்த 20 ஆண்டுகளுக்கான புதிய மற்றும் லட்சியமான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

10 உலகளாவிய சீர்திருத்த முன்மொழிவுகள்

அடுத்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குள், உலகளாவிய ஆளுமை அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 10 முக்கிய சீர்திருத்த முன்மொழிவுகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இவை எதிர்காலத்தில் ‘பிரிக்ஸ் சீர்திருத்த வழிகாட்டி வரைபடமாக’ அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் ‘உலகளாவிய தெற்கு’ நாடுகள் முக்கிய பங்காற்றினாலும், சர்வதேச முடிவெடுக்கும் அமைப்புகளில் அவற்றின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாகவும் மோடி கூறினார். ஒவ்வொரு நாட்டுக்கும் குரலும் பங்களிப்பும் கிடைக்கும் வகையில் சர்வதேச அமைப்புகள் மாற்றப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.

உலகத் தலைவர்களுடன் மோடி சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

எத்தியோப்பியாவுடன் பொருளாதார, பாதுகாப்பு ஒத்துழைப்பு

எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலியுடன் நடைபெற்ற சந்திப்பில் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

பலதரப்பு விவகாரங்களில் எத்தியோப்பியாவுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மலேசியாவின் கோட்டா கினபாலுவில் இந்திய துணைத் தூதரகம்

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நடைபெற்ற சந்திப்பில், சபா மாநிலத்தின் கோட்டா கினபாலுவில் இந்திய துணைத் தூதரகம் அமைப்பதற்கு மலேசியா ஒப்புதல் அளித்திருப்பது முக்கிய அறிவிப்பாக அமைந்தது.

ஆசியான் - இந்தியா உறவுகளை மேம்படுத்த மலேசியா வழங்கி வரும் ஆதரவை பிரதமர் மோடி பாராட்டியதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான விரிவான ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

ஒடிசாவில் ரூ.11.5 பில்லியன் டாலர் அலுமினியத் திட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமதுவுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் முக்கிய அம்சமாக, ஒடிசாவில் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒருங்கிணைந்த கிரீன்ஃபீல்ட் அலுமினியத் திட்டத்தை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் போது ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களை இரு தலைவர்களும் வரவேற்றதுடன், எதிர்காலத்திலும் பிரிக்ஸ் தளத்தில் நெருக்கமாக இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்.

திருக்குறளும் ராமேஸ்வரம் கோயில் பின்னணியும்

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்வுகளிலும் தமிழகம் தொடர்பான அம்சங்கள் கவனம் பெற்றன. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வரவேற்றபோது, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை மோடி பரிசாக வழங்கினார்.

பின்னர் பிரிக்ஸ் தலைவர்களை வரவேற்றபோது, பிரதமருக்குப் பின்னணியில் ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலின் புகழ்பெற்ற கோபுரப் படம் இடம்பெற்றிருந்தது.

மொத்தத்தில், புதுடெல்லி பிரகடனம் பொருளாதார ஒத்துழைப்பு முதல் சர்வதேச ஆளுமை சீர்திருத்தம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மத்திய கிழக்கு அமைதி முயற்சிகள் வரை பல முக்கிய உலக விவகாரங்களில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.