தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் இடம்பெற வேண்டும் என தமிழக அரசு கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி பகுதிகளிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தமிழுக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைக்கலாம்
அரசின் உத்தரவின்படி, கடைகளின் பெயர் பலகையில் தமிழ் பெயர் முக்கியமாக இடம்பெற வேண்டும். அதன் கீழ் ஆங்கிலத்தில் பெயரை குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
சில்லறை வர்த்தகர்கள் சங்கம் வழக்கு
இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையைச் சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்த தயாராக இருப்பதாக மனுதாரர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், கடைகளின் பெயர் பலகைகளை மாற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.
நவம்பர் 1 கடைசி அவகாசம்
மனுதாரர் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு நவம்பர் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கினார்.
இது கடைசி வாய்ப்பு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

