சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்தம்! மாநகராட்சி ஆணையாளர் முக்கிய அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட சொத்துவரி மாற்றியமைப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் அறிவித்துள்ளார்.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சொத்துவரி மாற்றியமைப்பு நடவடிக்கை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட சில வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கான சொத்துவரியை மறுமதிப்பீடு செய்ய மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சில சொத்து உரிமையாளர்களுக்கு திருத்திய வரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

எதிர்பாராத வகையில் வரிச்சுமை அதிகரித்ததாக பொதுமக்கள் மற்றும் சொத்து உரிமையாளர்களிடமிருந்து தொடர் கோரிக்கைகள் வந்த நிலையில், இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் கோரிக்கைகளை கவனமாக ஆய்வு செய்த பிறகு சொத்துவரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பழைய வரித்தொகையே தொடரும்

மாற்றியமைக்கப்பட்ட வரித்தொகை தற்போது மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு, அதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவிலேயே சொத்துவரி நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதிய வரித்தொகையின் அடிப்படையில் கூடுதல் தொகையை செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு அந்தத் தொகை வீணாகாது. செலுத்திய கூடுதல் தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பணவரியாக ஈடு செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

.