சென்னையில் ரெட் அலர்ட்: ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு

சென்னையில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்தது.

சென்னை: சென்னையில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகையில் உள்ள மழைக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், அருண்ராஜ், வெங்கடரமணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

சென்னையில் விடிய விடிய கனமழை

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பாரிமுனை, திருவொற்றியூர், கத்திவாக்கம், தண்டையார்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்தது.

இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மழை மேலும் தீவிரமடையக்கூடும் என்பதால் சென்னைக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செல்போன்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அலாரம் ஒலியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை

அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அரக்கோணத்தில் இருந்து 90 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளன. வேளச்சேரியில் ஏற்கெனவே ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, மழைநீர் தேங்கும் பகுதிகளில் நீரை வெளியேற்றவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். வானிலை எச்சரிக்கைகளையும் அரசு அறிவுறுத்தல்களையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.