சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 11 புதிய திட்டங்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். விவசாயம், கல்வி, மருத்துவம், நீர்வள மேலாண்மை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
நீர்வள மேம்பாட்டுக்குப் புதிய திட்டங்கள்
அத்திமனம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே ரூ.5 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கப்படும். செம்பூண்டி ஊராட்சியில் ஏரியின் மதகுகள் ரூ.4.50 கோடியில் சீரமைக்கப்படும். நெல்வாய் ஊராட்சியில் மடுவைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த ரூ.1.30 கோடி ஒதுக்கப்படும்.
பாலாற்றின் குறுக்கே படாளம் மற்றும் உதயம்பாக்கம் இடையே புதிய உயர்மட்டத் தடுப்பணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். சுமார் 30 கி.மீ. நீளமுள்ள மதுராந்தகம் உயர்மட்டக் கால்வாயைச் சீரமைத்து, அதன் மூலம் 30 ஏரிகளுக்குத் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள்
மதுராந்தகம் தொகுதியில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். ஆத்தூரில் ரூ.20 கோடியில் 20,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பகுதி மூடப்பட்ட சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.
மேலும், ரூ.10 கோடி மதிப்பில் 25 ஏக்கர் பரப்பளவில் மாநில விதைப் பண்ணை உருவாக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களைப் பாதுகாப்பதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.
ரூ.20 கோடியில் அரசு மகளிர் கல்லூரி
அச்சரப்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்.
கருங்குழியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். படித்த இளைஞர்களுக்காக மதுராந்தகத்தில் ரூ.3 கோடியில் அறிவுசார் மையமும் உருவாக்கப்படும்.
அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசரகாலச் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும். இதன் மூலம் விபத்துகளில் பாதிக்கப்படுவோர் மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கான சிகிச்சை வசதிகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலா, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம்
மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும். நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்காகப் புதிய தங்கும் விடுதி கட்டப்படும். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.4 கோடி மதிப்பில் வாரச்சந்தை அமைக்கவும், புதிய மழைநீர் வடிகால்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தின்னலூர் ஊராட்சியில் ரூ.70 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்படும். மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் 25 MVA திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றி நிறுவப்படும்.
வீடுகள், கூடுதல் பேருந்து வசதிகள்
பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் வீடற்ற குடும்பங்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் புதிய வீடுகள் கட்டி வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தின் கிராமப்புறங்களில் விவசாயிகள் விளைபொருட்களை எடுத்துச் செல்லவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எளிதாகப் பயணிக்கவும் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

