சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி’ (PPP) சிகிச்சைக்கான பிரத்யேக மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பிரத்யேக சிகிச்சை மையம்
விழிப்படலத்தில் ஏற்படும் பாதிப்புகளால் பார்வைத் திறன் குறையும் நோயாளிகளுக்காக இந்த சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட விழிப்படலத்தைப் பாதுகாத்து பார்வையை மேம்படுத்தும் சிகிச்சை முறைகளில் பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி முக்கியத்துவம் பெறுகிறது.
மையத்தைத் திறந்து வைத்த முதல்வர் விஜய், அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளைச் சந்தித்து அவர்களின் பார்வைத் திறன் குறித்து கேட்டறிந்தார். சிகிச்சை முறையின் செயல்பாடு மற்றும் அதன் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து மருத்துவமனை குழுமத் தலைவர் அமர் அகர்வால் அவருக்கு விளக்கினார்.
விழிப்படல மாற்று சிகிச்சைக்கு மாற்று முயற்சி
இதுகுறித்து அமர் அகர்வால் கூறுகையில், விழிப்படலத்தில் ஏற்படும் சேதம் பார்வையை பாதிக்கும் நிலையில், இதுவரை பல்வேறு நோயாளிகளுக்கு விழிப்படல மாற்று சிகிச்சை ஒரு முக்கிய தீர்வாக இருந்து வந்ததாக தெரிவித்தார்.
விழிப்படல மாற்று அறுவை சிகிச்சையில் தொற்று ஏற்படுவது உள்ளிட்ட சிக்கல்களும், மாற்று திசுவை உடல் நிராகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதனால், மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக பாதிக்கப்பட்ட விழிப்படலத்தின் முழு அடர்த்தியையும் சீரமைத்து, கண்ணின் உட்புற திசுக்களின் செயல்பாட்டை மீட்டெடுக்கும் சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தார்.
பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி சிகிச்சை
பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி சிகிச்சையின் மூலம் விழிப்படல பாதிப்பால் ஏற்படும் ஒளிப் பிறழ்வை குறைக்கும் வகையில் கண்ணின் பாவை குறிப்பிட்ட அளவுக்கு சுருக்கப்படுகிறது. இதன் மூலம் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், விழிப்படல மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் போதுமான அளவு கொடையாளர்கள் கிடைப்பது சவாலாக இருப்பதால், மாற்று சிகிச்சை தேவைப்படும் சில நோயாளிகளுக்கு இந்த புதிய அணுகுமுறை உதவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏராளமான நோயாளிகளுக்கு பயன்
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரத்யேக மையத்தின் மூலம் விழிப்படல பாதிப்பால் பார்வைத் திறனை இழந்த அல்லது குறைந்துள்ள பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து பார்வையை மேம்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் விட்ரியோ-ரெட்டினல் சேவைகள் பிரிவு இயக்குநர் மனோஜ் கத்தரி, இயக்குநர் அதியா அகர்வால் மற்றும் மருத்துவ சேவைகளின் பிராந்தியத் தலைவர் சவுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

