டெல்லியில் கனமழை: 18 விமானங்கள் ரத்து; 166 விமானங்கள் தாமதம்

டெல்லியில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; 166 விமானங்கள் தாமதமானது.

புதுடெல்லி: டெல்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக டெல்லியின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து மந்தமடைந்தது.

18 விமானங்கள் ரத்து

கனமழையின் தாக்கம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 166 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் விமானப் பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் பயணத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பல முக்கிய பகுதிகளில் மழைநீர் தேக்கம்

ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, எய்ம்ஸ், அசோகா சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன.

பார்லிமென்ட் தெரு, கன்னாட் பிளேஸ், எய்ம்ஸ், ஐடிஓ, ஆர்.கே.புரம், பெரோஸ்ஷா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் கனமழை பதிவானது.

மழை தொடரும் என எச்சரிக்கை

டெல்லி முழுவதும் பல இடங்களில் மிதமான மழையும், சில பகுதிகளில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையுடன் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மோசமான வானிலை நிலவினால் மேலும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் டெல்லி விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் தங்களது விமானத்தின் தற்போதைய நிலையை முன்கூட்டியே சரிபார்த்து பயணத்தை திட்டமிடுவது அவசியமாகியுள்ளது.