தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காக ரூ.1,439 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
1,232 ஊரகக் குடியிருப்புகளுக்குக் கூட்டுக் குடிநீர் திட்டம்
காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு, தாராபுரம், காங்கேயம், குண்டடம், பொங்கலூர், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் எஞ்சியுள்ள 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்குக் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1,439 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2,700 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
தாராபுரம் தொகுதியில் வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். மேலும், சின்னபுத்தூர் கிராமம் மஜரா குருவப்ப நாயக்கன் பாளையத்தில் 20 ஆண்டுகளாக வசித்து வரும் சுமார் 87 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
271 கிலோமீட்டர் பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படும்
தாராபுரம் தொகுதியில் பாசன வாய்க்கால்களில் உள்ள மண்திட்டுகள், புதர்கள் மற்றும் முட்செடிகள் அகற்றப்பட்டு, சுமார் 271 கி.மீ. நீளத்திற்குக் கால்வாய்கள் தூர்வாரப்படும். திருப்பூர் மாவட்டத்தில் இதற்காக 159 பணிகள் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
13,000 குடிநீர் இணைப்புகள்
தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டாரங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து சுமார் 13,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
மூலனூரில் புதிய தீயணைப்பு நிலையம்
தாராபுரம் வட்டம் மூலனூரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும்.
தாராபுரம் நகராட்சியில் மேம்பாட்டுப் பணிகள்
தாராபுரம் நகராட்சியில் ரூ.6 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், ரூ.40 லட்சத்தில் தெருவிளக்குகள் அமைத்தல், ரூ.6 கோடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

