சென்னை: தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் புதிய திட்டம் செப்டம்பர் 15 முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் போக்குவரத்துத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
புதிய வாகனங்களுக்கு டிஜிட்டல் ஆர்சி
புதிய வாகனம் வாங்குபவர்கள், தங்களுக்கான வாகனப் பதிவுச் சான்றிதழை (RC) இணையம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த டிஜிட்டல் சேவை மாநிலம் முழுவதும் செப்டம்பர் 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும்.
இதன் மூலம் வாகன உரிமையாளர்கள் பதிவுச் சான்றிதழின் அச்சுப் பிரதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ச்சி பெற்ற நாளிலேயே டிஜிட்டல் லைசன்ஸ்
ஓட்டுநர் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு, தேர்ச்சி பெற்ற அதே நாளில் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்த வசதியும் செப்டம்பர் 15 முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நடைமுறையில் காத்திருப்பு நேரம் குறையும்.
QR கோடு மூலம் ஆவணங்களை சரிபார்க்கலாம்
டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து, அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் மின்னணு முறையில் ஆவணங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம் ஆவணங்களை எளிதாக சரிபார்க்கவும், டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தவும் முடியும்.
ஆவணம் தொலைந்தாலும் மீண்டும் பதிவிறக்கம்
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையால், உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ, தேவையான நேரத்தில் மீண்டும் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி கிடைக்கும்.
தேவைப்பட்டால் டிஜிட்டல் ஆவணத்தை அச்சிட்டுப் பயன்படுத்தவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘எனிவேர் ரெஜிஸ்ட்ரேஷன், லைசன்சிங்’ வசதி
போக்குவரத்துத் துறையின் அலுவலக சேவைகளை மக்கள் எளிதாகப் பெறும் வகையில், “Anywhere Registration / Licensing” முறையும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய டிஜிட்டல் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், போக்குவரத்து அலுவலக சேவைகளைப் பெற பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய தேவையும் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

