சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் நீண்டகால வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று பெருந்திரள் முறையீடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தங்களது அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் நேரடியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் முக்கிய கோரிக்கைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்காததால் அடுத்தகட்டமாக பெருந்திரள் முறையீடு நடத்தப்படுவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.முக்கிய 10 அம்சக் கோரிக்கைகள்
- 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குதல்.
- அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கும் மாதம் ₹50,000 ஊதியம் வழங்குதல்.
- கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாதங்களுக்கும் முழு ஊதியம் வழங்குதல்.
- EPF நடைமுறைப்படுத்துதல் மற்றும் பணியிட மாறுதல் வழங்குதல்.
- அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு, விபத்து மற்றும் நோய் காரணமாக உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு, பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்குதல்.
- 10 ஆண்டுகள் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை (Gratuity) வழங்குதல்.
- கௌரவ விரிவுரையாளர்களுக்கு முனைவர் பட்ட (Ph.D.) நெறியாள்கை (Guideship) மேற்கொள்ள அனுமதி வழங்குதல்.
- பல்கலைக்கழகத் தேர்வுகளில் Internal / External Examiner உள்ளிட்ட பொறுப்புகளை வழங்குதல்.
- கௌரவ விரிவுரையாளர்களின் கல்வித்திறனை மேம்படுத்த ஆண்டுக்கு இருமுறை புத்தாக்கப் பயிற்சி (Refresher Course) வழங்குதல்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களை Deputation என்ற நிலையிலிருந்து நீக்கி, அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களாக அங்கீகரித்தல்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கௌரவ விரிவுரையாளர்கள் சென்னைக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் இந்தப் பெருந்திரள் முறையீடு நடைபெற்று வருகிறது.
அரசிடம் எதிர்பார்ப்பு
கௌரவ விரிவுரையாளர்களின் 10 அம்சக் கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து, அவர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு சாதகமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும், நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

