ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2026 விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஜூடோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா பதக்க வேட்டையில் தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
அஷ்மிதா டெ-வின் தங்க வெற்றி
மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு ஜூடோ இறுதிப்போட்டியில் இந்தியாவின் 22 வயதான அஷ்மிதா டெ, கனடாவின் ஹைடி குவாச்சை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே தாக்குதல் பாணியில் விளையாடிய இருவரும் சமநிலையை எட்டியதால் போட்டி 'கோல்டன் ஸ்கோர்' முறைக்கு சென்றது.
பின்னர் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அஷ்மிதா டெ 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் காமன்வெல்த் 2026 ஜூடோ போட்டியில் இந்தியாவின் முதல் தங்கத்தை அவர் பெற்றுத் தந்தார்.
ஹர்ஷ் சிங்கின் அசத்தல்
ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியிலும் இந்திய வீரர் ஹர்ஷ் சிங் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றார். இதனால் ஜூடோ போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனையை படைத்தது.
பதக்கப் பட்டியலில் இந்தியா
இந்த வெற்றிகளால் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 தங்கம், 10 வெள்ளிப் பதக்கம் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் இடம்பெற்றுள்ளன. காமன்வெல்த் 2026 தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

