புதுடெல்லி: விரைவு வீட்டு விநியோக சேவைகளில் செயல்பட்டு வரும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், தற்போது எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக சேவையையும் தனது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இந்தியாவின் பிற முக்கிய நகரங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையை செயல்படுத்துவதற்காக, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்துடன் ஸ்விக்கி இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் இன்ஸ்டாமார்ட் செயலி வழியாக சில எளிய படிகளில் எல்பிஜி சிலிண்டரை ஆர்டர் செய்து, குறுகிய நேரத்திலேயே வீட்டிற்கு பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது, 10 கிலோ எடையுள்ள HP Navya காம்பசிட் சிலிண்டர் மற்றும் 5 கிலோ எடையுள்ள சிறிய மெட்டல் சிலிண்டர் ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே இந்த சேவையின் கீழ் வழங்கப்படுகின்றன. குறைந்த எரிவாயு தேவையுள்ள குடும்பங்கள், தனியாக வசிப்பவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த வகை சிலிண்டர்கள் ஏற்றதாக இருக்கும்.
இந்த சேவையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், ஏற்கனவே எல்பிஜி இணைப்பு பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய வாடிக்கையாளர்களும் நேரடியாக சிலிண்டரை வாங்க முடியும். முதல் முறையாக வாங்கும் போது காலி சிலிண்டரை ஒப்படைக்க வேண்டிய தேவையில்லை. அதன் பின்னர் நடைபெறும் மறுவாங்குதல்களில் வழக்கமான நடைமுறையின்படி காலி சிலிண்டரை திருப்பி வழங்கி புதிய சிலிண்டரைப் பெற முடியும்.
பெங்களூருவில் இந்த சேவைக்கு கிடைக்கும் பயனாளர் வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு, சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களிலும் விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் அன்றாட தேவைகளை விரைவாக வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் சேவையை தொடர்ந்து, சமையல் எரிவாயு விநியோகத்தையும் ஒரே தளத்தில் வழங்கும் முயற்சி நகர்ப்புற மக்களுக்கு கூடுதல் வசதியை உருவாக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

