டெஹ்ரான்: மேற்காசியாவில் நீடித்து வரும் ஈரான் - அமெரிக்க மோதலின் தாக்கம் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ கட்டமைப்புகளிலும் எதிரொலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய 8 நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் ஈரான் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி விவகாரம், ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு, லெபனான் தொடர்பான தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், கடந்த பிப்ரவரி முதல் மோதல் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம்
உலகின் முக்கியமான கடல்வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஈரானுக்குச் சொந்தமான 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக, அமெரிக்க கடற்படையின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை சிறைபிடித்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அண்டை நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
8 நாடுகளில் அமெரிக்க கட்டமைப்புகளுக்கு சேதம்
மத்திய கிழக்கில் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களால் 8 நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களில் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனின் அதிகாரப்பூர்வ கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ கட்டமைப்புகள் தாக்குதலின் பாதிப்பை சந்தித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதம்
அமெரிக்க ராணுவ தளங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டடங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் சேமிப்பு கிடங்குகளும் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதவிர, அமெரிக்காவுக்குச் சொந்தமான 12-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KC-135 விமானங்கள் அழிப்பு
சவுதி அரேபியா மற்றும் ஈராக் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்துக்குப் பயன்படுத்தப்படும் பல KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
நீண்ட தூர ராணுவ நடவடிக்கைகளில் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணியில் இதுபோன்ற விமானங்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், அவற்றின் இழப்பு அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பார்க்கப்படுகிறது.
துபாய் தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகமும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், குவைத்தில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் குறையுமா?
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் உள்கட்டமைப்புக்கு ஈரான் - அமெரிக்க மோதல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை வெளிப்படுத்தும் முதல் அதிகாரப்பூர்வ பென்டகன் அறிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள சேதங்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்கா வைத்துள்ள ராணுவ தளங்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும், சில தளங்களின் இருப்பிடங்களை மாற்றியமைப்பது குறித்தும் பென்டகன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், மேற்காசியாவில் அமெரிக்காவின் ராணுவ நிலைப்பாட்டில் எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

