திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, மாநிலத்தின் பெயர் மாற்றத்துக்கான சட்ட நடைமுறை நிறைவு பெற்றுள்ளது.
அரசியலமைப்பில் பெயர் மாற்றம்
கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றுவதுடன், அதற்கேற்ப இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ் இந்த பெயர் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்
கேரள பெயர் மாற்ற மசோதா மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையும், மாநிலங்களவையில் புதன்கிழமையும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளதால், மசோதா சட்டமாகியுள்ளது.
2024-ல் தொடங்கிய முயற்சி
மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான தீர்மானத்தை கேரள அரசு 2024 ஜூன் மாதத்தில் மத்திய அரசுக்கு அனுப்பியது. இதையடுத்து, பெயர் மாற்றம் தொடர்பான முன்மொழிவு கேரள சட்டப்பேரவையின் கருத்துக்காக அனுப்பப்பட்டது.
பின்னர், கேரள சட்டப்பேரவை அந்த முன்மொழிவை ஏற்று ஒருமனதாக பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இனி அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ‘கேரளம்’
குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ள ‘கேரளா’ என்ற பெயர் ‘கேரளம்’ என மாற்றப்படும். இதன் மூலம் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பெயர் மாற்றத்துக்கான சட்டப்பூர்வ நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.

