சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2026 தொடரின் இறுதிப் போட்டியில் மதுரை பேந்தர்ஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் கோவை அணிக்கு இது 3-வது TNPL பட்டமாக அமைந்தது.
182 ரன்கள் குவித்த கோவை
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்களை அந்த அணி சேர்த்தது.
கோவை அணியின் பேட்டிங்கில் ஆந்த்ரே சித்தார்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் விளாசினார். பாலசுப்ரமணியம் சச்சின் 33 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்தார்.
கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ராதாகிருஷ்ணன் 13, சுரேஷ் லோகேஷ்வர் 11, அம்ப்ரிஷ் 6, தீபன் லிங்கேஷ் 1 ரன் எடுத்தனர். மாதவ பிரசாத் 13 ரன்களுடனும், கிஷோர் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மதுரை பேந்தர்ஸ் அணியின் பந்துவீச்சில் சரவணன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
முதல் பந்திலேயே மதுரைக்கு அதிர்ச்சி
183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மதுரை பேந்தர்ஸ் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணிக்கு தொடக்கமே பெரும் பின்னடைவாக அமைந்தது. இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ராம் குமார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரில் சித்தார்த் மகாதேவனும் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்த ஓவர்களில் மதுரை அணியின் தொடக்க வீரர்கள் வெளியேறியதால், இலக்கை துரத்துவதில் அந்த அணி தடுமாறியது.
98 ரன்களில் சுருண்ட மதுரை
மதுரை அணியில் சதுர்வேத் மட்டும் 40 ரன்கள் சேர்த்தார். ஹரி ராகவேந்திரா மற்றும் கேப்டன் பாலச்சந்தர் அனிருத் ஆகியோர் தலா 24 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
14.2 ஓவர்களில் மதுரை பேந்தர்ஸ் அணி 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் கோவை கிங்ஸ் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
கோவை பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்
கோவை கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் கேப்டன் ஷாருக்கான் மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். தீபன் லிங்கேஷ் 2 விக்கெட்களையும், ஜாதவேத் சுப்ரமணியன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன்
இறுதிப் போட்டியில் 82 ரன்கள் விளாசி கோவை கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆந்த்ரே சித்தார்த் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட பாலசுப்ரமணியம் சச்சின் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.
மதுரை பேந்தர்ஸை வீழ்த்தியதன் மூலம் கோவை கிங்ஸ் 2026 TNPL தொடரின் சாம்பியனாகி, தனது 3-வது TNPL பட்டத்தை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது.

