சென்னை: கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, இன்று முதல் மொத்தம் 4,260 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள்
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாளை வெள்ளிக்கிழமை 740 பேருந்துகளும், சனிக்கிழமை 880 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடு மற்றும் மாதவரத்திலிருந்தும் சேவை
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு இன்று 210 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 115 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு இன்று முதல் சனிக்கிழமை வரை தினமும் 95 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை 805 பேருந்துகள்
விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பும் வசதிக்காக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப 805 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு அதிகரிப்பு
விடுமுறை பயணத்துக்காக இன்று 14,016 பேரும், நாளை 8,688 பேரும், சனிக்கிழமை பயணத்துக்காக 6,459 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பயணத்துக்காக இதுவரை 14,239 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
விடுமுறை நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், பயணிகள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

