மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள 1.73 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தில் பட்டா மாற்றம் மற்றும் பத்திரப்பதிவில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் தாசில்தார், சார் பதிவாளர்கள் உள்ளிட்ட 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவிலின் தினசரி பூஜை மற்றும் சேவைகளுக்காக 1930-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் சொத்தாக இந்த நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. உயிலின் நிபந்தனைகளின்படி, அந்த சொத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டா மாற்றத்தில் முறைகேடு குற்றச்சாட்டு
2016-ஆம் ஆண்டு சிலர் பட்டா கோரி விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, கோவில் பெயரில் இருந்த நிலம் தனிநபர்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் வருவாய் அதிகாரிகள் விசாரணை நடத்தி, பட்டா மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் கோவில் பெயரிலேயே பதிவு செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், பின்னர் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டு, தொடர்ந்து பவர் பத்திரம், அடமான பதிவு மற்றும் சொத்து பரிமாற்றங்கள் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
19 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த விவகாரத்தில் முன்னாள் தாசில்தார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர், சார் பதிவாளர்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட மொத்தம் 19 பேர் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், சட்ட விதிமுறைகளை மீறி பட்டா மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகாருக்கு பின் நடவடிக்கை
இந்த நில மோசடி தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விசாரணை தீவிரம்
கோவில் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் பட்டா, பத்திரப்பதிவு மற்றும் அடமான பதிவுகள் செய்யப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

