புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு, தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சுமார் 200 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாகச் சென்று தனது 28 ஆண்டுகால நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளாக தான் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்தப் பாதயாத்திரையை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மற்றும் கடலூர் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் அவர் தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
சாதாரண பக்தரைப் போல் நடைபயணம்
அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு நடுவிலும், சாதாரண பக்தரைப் போல தோளில் துண்டுடன் நீண்ட தூரம் நடந்து செல்லும் அமைச்சரின் தோற்றம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் செல்லும் வழியெங்கும் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 29ல் வேளாங்கண்ணி செல்ல திட்டம்
அமைச்சர் மரிய வில்சனின் இந்த ஆன்மிகப் பாதயாத்திரை வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வேளாங்கண்ணி புனித தலத்தைச் சென்றடைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு உள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வழிபாடு செய்து, தனது 28 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் நீண்ட தூர பக்திப் பயணம் தற்போது அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.

