சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை தமிழக அரசு அனுமதிக்காது என்றும், அணை கட்டுவதற்காக ஒரு கல்லைக்கூட வைக்க முடியாது என்றும் சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் உறுதிபட தெரிவித்தார்.
மேகேதாட்டு விவகாரம் குறித்து பேரவையில் விவாதம்
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நீர்வளத் துறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
திமுக உறுப்பினர் துரை. சந்திரசேகரன் பேசும்போது, கர்நாடக முதல்வர் மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று தொடர்ந்து கூறி வருவதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“முதல்வருக்கு யார் மீதும் பயம் இல்லை”
இதற்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், தமிழக முதல்வருக்கு யாரைக் கண்டும் பயம் இல்லை என்று தெரிவித்தார்.
“மேகேதாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். கர்நாடக அரசு காவிரியில் மேகேதாட்டு அணை கட்ட விடமாட்டோம். அணை கட்ட ஒரு கல்லைக்கூட வைக்க முடியாது” என்று அமைச்சர் உறுதியுடன் கூறினார்.
சட்டரீதியாகவும் நடவடிக்கை: அமைச்சர் அருண்ராஜ்
காவிரி விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், இது தற்போது உருவான பிரச்சினை அல்ல என்றும், பல ஆண்டுகளாக நீடித்து வரும் விவகாரம் என்றும் குறிப்பிட்டார்.
தமிழக அரசு காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண சட்டரீதியான நடவடிக்கைகளையும், பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அனைத்து விதமான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் அதிமுக - திமுக வாதம்
முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசும்போது, 1986-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி காலத்திலிருந்தே காவிரி பிரச்சினை தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் காவிரி வழக்கில் இறுதித் தீர்ப்பு பெறப்பட்டதாகவும், கர்நாடக அரசு அவ்வப்போது மேகேதாட்டு அணை விவகாரத்தை எழுப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து காவிரி பிரச்சினையில் திமுகவின் நடவடிக்கைகள் குறித்து ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
“ஒவ்வொரு ஆட்சியும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளது”
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், 1974-ம் ஆண்டு முதலே காவிரி பிரச்சினைக்காக அப்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார். ஒவ்வொரு ஆட்சியிலும் அந்தந்த முதல்வர்கள் காவிரி விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார், காவிரி ஒப்பந்தம் தொடர்பாக 1974-ம் ஆண்டு திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நேரு, காவிரி பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் அப்போதைய பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: பேரவைத் தலைவர்
காவிரி பிரச்சினை உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், அண்டை மாநிலங்களுடன் இணக்கமான சூழலைப் பேணுவது அவசியம் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் ஒவ்வொரு ஆட்சியிலும் அந்தந்த முதல்வர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விஷயத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

