புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொதுமக்களுடன் உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 5 அன்று மாலை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
இந்த பயணத்தின் போது, மற்ற பயணிகளுடன் அமர்ந்து பயணித்த பிரதமர் மோடி, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் அன்பாக உரையாடினார். மெட்ரோவில் நடந்த இந்த சந்திப்புகள் தொடர்பான காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டன.
சமூக வலைதளத்தில் வீடியோ பகிர்வு
தனது மெட்ரோ பயண அனுபவங்களை பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பயணத்தின் போது பொதுமக்களுடன் நடந்த உரையாடல்களையும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மெட்ரோவில் சாதாரண பயணிகளுடன் பிரதமர் மோடி பயணித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

