நேபாள பெருவெள்ளம்: உ**ழப்பு 810 ஆக உயர்வு; 3,000-க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உ**ழந்தோர் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்துள்ளது. 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மீட்பு மற்றும் தேடுதல் பணி தீவிரம்.

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பெருவெள்ளத்தில் உ**ழந்தவர்களின் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 26-ம் தேதி இமயமலைப் பகுதியில் பனிமலைகள் உடைந்ததைத் தொடர்ந்து நேபாளத்தின் பல்வேறு ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா, தாதிங், நுவாகோட், கோர்கா, டானாஹன், நவல்பூர், பராசி, சித்வான் உள்ளிட்ட எட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

5-வது நாளாக மீட்புப் பணி

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் நேபாளம் - சீனா இடையிலான முக்கிய நெடுஞ்சாலையும் சேதமடைந்துள்ளது.

நேபாளத்தில் உள்ள நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய 898 தொழிலாளர்கள் உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை கண்டறியும் பணியில் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

நீர்மின் திட்ட சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கல்

திரிசூலி 3ஏ நீர்மின் திட்டப் பகுதியில் உள்ள சுரங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரங்கம் முழுவதும் சேறும் சகதியும் சூழ்ந்துள்ளதால், மீட்புப் பணியில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளன.

நேபாளம் சென்றுள்ள இந்திய நிபுணர் குழு, சுரங்கத்துக்குள் ஆக்சிஜன் செல்லும் வகையில் சுமார் 6 அங்குலம் அளவிலான துளையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒருவர் நுழையும் அளவுக்கு சுரங்கத்தின் பக்கவாட்டில் நான்கு இடங்களில் துளையிடும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் பாதைகள் மூலம் சுரங்கத்துக்குள் சென்று தொழிலாளர்களை மீட்க முடியும் என இந்திய நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சித்வான் மாவட்டத்தில் அதிக உ**ழப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 810 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சித்வான் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 248 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர், ட்ரோன்கள் மூலம் நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளிப்புறத் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

உணவுப் பொட்டலங்கள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

உடல்களை அடையாளம் காண இந்திய நிபுணர்கள் உதவி

அடையாளம் காணப்படாத உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான பணிகளிலும் இந்தியா உதவி செய்து வருகிறது. இதற்காக தடயவியல் மற்றும் மரபணு ஆராய்ச்சி நிபுணர்கள் அடங்கிய குழு நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத உடல்களில் மரபணு பரிசோதனை மேற்கொண்டு, அவர்களின் குடும்பத்தினரை அடையாளம் காணவும் உடல்களை உரிய உறவினர்களிடம் ஒப்படைக்கவும் இந்த நிபுணர்கள் உதவ உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மற்றும் உ**ழப்பு மேலும் அதிகரிக்குமா என்ற கவலை நீடிக்கிறது.