சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
யார், எந்த தொகுதியில் போட்டி?
நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தாராபுரம் தொகுதியில் கார்த்திகாவும், மதுராந்தகம் தொகுதியில் ஜானகிராமனும் போட்டியிடுகின்றனர்.
இதில் ஜானகிராமன் ஏற்கெனவே 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். அந்தத் தேர்தலில் அவர் 4,950 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தாராபுரம், மதுராந்தகத்தில் பலமுனைப் போட்டி
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் ஏற்கெனவே திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் இ. பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ். சுகன்யாவும் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் மு. பானுமதியும் களமிறக்கப்பட்டுள்ளனர். தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் அக்டோபர் 6-ல்
மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். பின்னர் அவர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் களம் மேலும் சூடுபிடிப்பு
நாதகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் நாதக சார்பில் மதுராந்தகத்தில் போட்டியிட்ட ஜானகிராமனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
இரு தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தல் முடிவு ஆளும் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

