சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 422 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ரூ.175 கோடி மதிப்பில் இந்த தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதன உற்பத்தி தொடர்பான தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத் திட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் பகுதிகளை உள்ளடக்கி சென்னைக்கான இரண்டாவது சர்வதேச பசுமை விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. மத்திய அரசுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விமான நிலையத் திட்டத்துக்காக மொத்தம் 5,800 ஏக்கர் நிலம் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தனியார் நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து சுமார் 1,800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது.
விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு
பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக பல்வேறு கட்டங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.
இதற்கிடையே தவெக ஆட்சி அமைந்த பின்னர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.
விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருந்தார். அதேவேளையில், விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இடதுசாரிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
422 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா
இந்த நிலையில், பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் 422 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. மொத்தம் ரூ.175 கோடி மதிப்பில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது.
செமிகண்டக்டர், மின்னணு உற்பத்திக்கு முக்கியத்துவம்
மதுரமங்கலத்தில் அமைய உள்ள இந்த சிப்காட் தொழிற்பூங்காவில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதன உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்னணு உற்பத்தி மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தொழில் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிலம் கையகப்படுத்த அரசாணை
பரந்தூர் விமான நிலையத் திட்டத்துடன் தொடர்புடைய நிலப் பயன்பாடு குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 422 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

