சென்னை: விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, தமிழக இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை வளர்க்கும் நோக்கில் மாநிலத்தில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைகளில் தமிழகம் ஏற்கனவே முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழகத்தில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய உற்பத்தி மற்றும் தொழிற்சாலை திட்டங்களுக்கு மாநிலத்தை முக்கியத் தேர்வாகக் கருதி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வலுவான மோட்டார் ஸ்போர்ட்ஸ் கட்டமைப்பு
மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியிலும் தமிழகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. குறிப்பாக கோவையில் இந்தத் துறையைச் சார்ந்த பல்வேறு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னைக்கு அருகிலுள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் மற்றும் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே போன்ற பந்தயத் தளங்கள், தமிழகத்தின் மோட்டார் பந்தய விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கிய கட்டமைப்புகளாக உள்ளன.
இந்த பந்தயத் தளங்களில் தேசிய அளவிலான எஃப்-3 மற்றும் எஃப்-4 உள்ளிட்ட கார் பந்தயப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மோட்டார் ரேசிங் துறையிலும் தமிழகம் தொடர்ந்து தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறது.
சர்வதேச தரத்தில் புதிய நகரம்
புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தில் சர்வதேச தரத்திற்கு இணையான பந்தயத் தடங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் பந்தயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 போன்ற சர்வதேச தர பந்தயங்களை நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
விளையாட்டுச் சுற்றுலாவுக்கு புதிய வாய்ப்பு
உலகத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வசதிகளை உருவாக்குவதன் மூலம் விளையாட்டுச் சுற்றுலா வளர்ச்சியடையும் என்றும், சிறப்பு வாகன உற்பத்தித் தொழில்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய துணைத் தொழில்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என அரசு தரப்பில் கருதப்படுகிறது.
தமிழக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்தை முறையாக வழிநடத்தி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய புதிய வீரர்களை உருவாக்கும் முக்கிய மையமாக இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன உற்பத்தி, பந்தய விளையாட்டு, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் விளையாட்டுச் சுற்றுலா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ள இந்த புதிய நகரம், தமிழகத்தை சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரைபடத்தில் மேலும் முக்கிய இடத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

