Ramraj Cotton
Ramraj Cotton

தவெகவுக்கு அங்கீகாரம்: விசில் சின்னத்தையும் உறுதி செய்த தேர்தல் ஆணையம் – முதல்வர் விஜய் மகிழ்ச்சி

தமிழக வெற்றிக் கழகத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளதாக முதல்வர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாகவும், கட்சியின் விசில் சின்னத்தையும் அதிகாரப்பூர்வ சின்னமாக அங்கீகரித்துள்ளதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தொடக்கம் முதல் தற்போதைய அரசியல் பயணம் வரை பல்வேறு விஷயங்களை நினைவுகூர்ந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

2024-ல் தொடங்கப்பட்ட தவெக

தமிழக மக்களும் உலகத் தமிழ் உறவுகளும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிக்கடன் செலுத்தும் வகையில் 2024-ல் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதாக விஜய் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையுடன் அரசியல் களத்தில் தவெக பயணத்தைத் தொடங்கி 27 மாதங்களே ஆன நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான அரசியல் வெற்றியை மக்கள் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 சதவீத வாக்குகள் பெற்றதாக விஜய் பெருமிதம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீத வாக்குகளைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்ததாக விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுமார் 1.8 கோடி வாக்குகளைப் பெற்று ஆட்சியையும் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன், தமிழக மக்களின் முதல் சேவகனாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

ஊழலற்ற நிர்வாகம் இலக்கு

ஊழலற்ற மற்றும் நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு செயல்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையில் வெற்றிக் கூட்டணியை அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை அமைத்துள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தவெகவுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் நிகழ்த்திய மாற்றத்தின் வெளிப்பாடாக, தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் தேர்தல் சின்னமான விசில் சின்னத்துக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் தவெகவின் சின்னமாக அங்கீகரித்துள்ளது” என்று விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தொண்டர்களுக்கு நன்றி

கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்து வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளையும் இந்த நேரத்தில் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்வதாக விஜய் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையுடன் தங்களை நம்பும் ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கட்சியை பாதுகாத்து வளர்த்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள விஜய், “நன்றி! நன்றி! நன்றி!” என தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.