சென்னை: தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சூழல் காரணமாக சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 23) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், மதுரை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 24: 2 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
நாளை (ஆகஸ்ட் 24) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பிற பகுதிகள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், மதுரை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 25-ம் தேதி நிலவரம்
ஆகஸ்ட் 25-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

