திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2027 ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு ஒதுக்கீட்டை அக்டோபர் 19 முதல் கட்டங்களாக வெளியிடுவதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்
சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான ஒதுக்கீடு அக்டோபர் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்கான மின்னணு குலுக்கல் முறையில் அக்டோபர் 21-ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.
குலுக்கலில் தேர்வு செய்யப்படுவோர் அக்டோபர் 21 முதல் 23-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட்டுகளை உறுதி செய்ய வேண்டும்.
அக்டோபர் 22, 23-ல் சிறப்பு சேவை டிக்கெட்டுகள்
கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் அக்டோபர் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மெய்நிகர் சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரிசன நேர ஒதுக்கீடு அன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும்.
அக்டோபர் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண டோக்கன்களும், காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகின்றன. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கான தரிசன ஒதுக்கீடு அன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும்.
₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் எப்போது?
2027 ஜனவரி மாதத்திற்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் அக்டோபர் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு ஒதுக்கீடு அக்டோபர் 24-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என TTD தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யுங்கள்
தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறைகளை முன்பதிவு செய்யும்போது தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போலி இணையதளங்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ttdevasthanams.ap.gov.in/

