முதல்வர் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது திமுக தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை 9.30 மணிக்கு அவை கூடியது. பொதுத்துறை, அயலகத் தமிழர் நலன், சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வுக்கால நலன்கள், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
இதற்கிடையே, சர்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் மிசா விவகாரம் தொடர்பாக முதல்வர் நேற்று பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எ.வ.வேலு வலியுறுத்தல்
திமுக கொறடா எ.வ.வேலு பேசும்போது, சட்டப்பேரவையில் பின்பற்றப்படும் மரபுகள் மற்றும் விதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீதிமன்ற விசாரணையில் உள்ள விவகாரங்கள் தொடர்பாக அவையில் பேசுவது தொடர்பான விதிகள் இருப்பதாகவும், நேற்று முதல்வர் பேசியபோது திமுக உறுப்பினர்கள் அமைதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அமலாக்கத் துறை அறிக்கை வாசிக்கப்பட்டது, மிசா சட்டம் தொடர்பான விவாதம், முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் தொடர்பான குறிப்புகள் உள்ளிட்டவை குறித்து திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சர்காரியா கமிஷன் தொடர்பான விவகாரத்திலும் முதல்வர் தெரிவித்த கருத்துகளுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறிய எ.வ.வேலு, அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினார்.
“அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை”
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், முதல்வர் விஜய் பேசியபோது திமுக உறுப்பினர்கள் அவரது உரையை முழுமையாக கவனிக்கவில்லை என்று தெரிவித்தார்.
மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக முதல்வர் குறிப்பிட்டது உண்மை சம்பவம் என்றும், சர்காரியா கமிஷன் தொடர்பான விவகாரம் ஏற்கெனவே பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கூறினார்.
மேலும், சபாநாயகரின் அனுமதியின்றி திமுக உறுப்பினர்கள் பதாகைகளை எடுத்துக் காட்டியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, முதல்வர் விஜய் நேற்று பேசிய எந்தக் கருத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள்
சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், அவரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதற்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், தொடர்ந்து இரண்டு நாட்களாக அமளியில் ஈடுபட்டு வரும் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றம்
இதனைத் தொடர்ந்து, திமுக கொறடா எ.வ.வேலுவுக்கு அவையில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். அவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்றும் தெரிவித்தார்.
ஆனால், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் அமர்ந்தபடி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி, அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.
இதனால் தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரின் கடைசி நாளிலேயே ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் அமளி ஏற்பட்டது.

