2000 கி.மீ. ஊரக சாலைகள் மேம்பாடு: ரூ.2,550 கோடி திட்டம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் 2,000 கி.மீ. ஊரக சாலைகளை ரூ.2,550 கோடியில் மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட 33 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டார்.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளின் சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் 2,000 கி.மீ. சாலைகளை மேம்படுத்த ரூ.2,550 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்தபோது, சாலை உள்கட்டமைப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

ஊரக சாலைகளுக்கு ரூ.2,550 கோடி

ஊரகச் சாலைகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில், ஆண்டுதோறும் 2,000 கி.மீ. சாலைகளை மேம்படுத்த ரூ.2,550 கோடியில் ஊரகப்பகுதி சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், முக்கிய சாலைகளுடன் ஊரகப் பகுதிகளின் இணைப்பையும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

7 மாநகராட்சிகளில் 500 கி.மீ. சாலைகள் மேம்பாடு

சென்னை, ஆவடி, தாம்பரம், திருச்சி, கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 500 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரல், கத்திப்பாரா, கோயம்பேடு பகுதிகளை இணைக்கும் முக்கோண வழித்தடச் சாலைகள் மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலைகள் ரூ.400 கோடியில் மேம்படுத்தப்படும்.

சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி கடல்வழி உயர்மட்டச் சாலை

சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்டச் சாலைத் தொடர், மும்பை - நவிமும்பை கடல் இணைப்புச் சாலை திட்டத்தைப் போன்று கட்டம் கட்டமாக உருவாக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

இதே வழித்தடத்தில் கடல்வழிப் பயணிகள் படகு போக்குவரத்து சேவையைத் தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்புக்கு ரூ.500 கோடி

முதல்வரின் பாதுகாப்பான சாலைகள் இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.500 கோடியில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். நெடுஞ்சாலை அவசர சிகிச்சை மையங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவும் திட்டத்தில் இடம்பெறும்.

சென்னையில் புதிய உயர்மட்டச் சாலைகள்

சென்னை கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னையில் வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படுவதுடன், பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள குறுகலான பாலங்களும் அகலப்படுத்தப்பட உள்ளன. சென்னை - திருத்தணி சாலையில் பாடி முதல் திருநின்றவூர் வரை உயர்மட்டச் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய சாலை மற்றும் போக்குவரத்து திட்டங்கள்

  • சென்னை - கோவை - தூத்துக்குடியை இணைக்கும் தொழில்தட விரைவுச்சாலை உருவாக்கப்படும்.
  • சென்னை - கன்னியாகுமரி 8 வழிச்சாலை திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகள் மேம்படுத்தப்படும்.
  • திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்டச் சாலைத் திட்டம் விரைவுபடுத்தப்படும்.
  • ராமேசுவரம் அக்னித் தீர்த்தம் முதல் மண்டபம் வரை உள்நாட்டுப் பயணிகள் படகு சேவை தொடங்கப்படும்.
  • நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான படகு போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்படும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

புதிய உள்கட்டமைப்பு நிறுவனம்

ரூ.1 கோடி தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனம் உருவாக்கப்படும். மாநிலத்தில் ரூ.200 கோடிக்கும் அதிக மதிப்பிலான அரசு கட்டிடப் பணிகளை மேற்கொள்ள இந்த நிறுவனம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டை திட்டமிடும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பெருந்திட்டம் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

33 முக்கிய அறிவிப்புகள்

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பாக ஊரகச் சாலை மேம்பாடு, நகர்ப்புற சாலைகள், உயர்மட்டச் சாலைகள், கடல்வழிப் போக்குவரத்து, சாலை பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 33 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.