பிரிட்டனில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் தொழில்நுட்பக் கோளாறு: 625 விமானங்கள் ரத்து

பிரிட்டனில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 625 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கடும் அவதி

லண்டன்: பிரிட்டனில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டன் வான்வழி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முக்கிய விமான நிலையங்கள் பாதிப்பு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லண்டன் ஹீத்ரோ, காட்விக், ஸ்டான்ஸ்டெட், மான்செஸ்டர் மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து புறப்பட வேண்டிய விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதேநேரத்தில், வருகை தரும் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

625 விமானங்கள் சேவை ரத்து

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதுவரை 625 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு பல மணி நேரம் விமானத்துக்குள்ளேயே சிக்கித் தவித்ததாக பல பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பல பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இயல்பு நிலைக்கு கொண்டு வர தீவிர முயற்சி

விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் பிரச்னையை சரிசெய்து, சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பிரிட்டன் வான்வழி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியதாவது:

“தொழில்நுட்பப் பிரச்னையை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எங்கள் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். இயல்பு நிலையை விரைவாக மீட்டெடுக்க அவசரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

பயணத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான இடையூறுகளை நாங்கள் உணர்கிறோம். அதற்காக மன்னிப்பைக் கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

சூரிச்சில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

இதற்கிடையே, மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அவதியடைந்தனர்.

பிரிட்டனின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை விரைவாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.