புதுடெல்லி: யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கான புதிய Merchant Discount Rate (MDR) விதிமுறை தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதன்படி, தனிநபர்களுக்கு இடையிலான அனைத்து UPI பரிவர்த்தனைகளும் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும். வணிகர்களுக்கு செய்யப்படும் ரூ.2,000 வரையிலான குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் இல்லை.
தனிநபர் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை
ஒரு தனிநபரிடம் இருந்து மற்றொரு தனிநபருக்கு UPI மூலம் எவ்வளவு தொகை அனுப்பப்பட்டாலும், அதற்கு பரிவர்த்தனை கட்டணம், பிளாட்ஃபார்ம் கட்டணம் அல்லது வேறு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால், தனிநபர்களுக்கு இடையிலான UPI பணப்பரிமாற்றங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது. மொத்த UPI பரிவர்த்தனை மதிப்பில் சுமார் 70 சதவீதம் P2P பரிவர்த்தனைகள் என்பதால், அவை MDR விதிமுறைக்கு வெளியிலேயே தொடரும்.
ரூ.2,000 வரை வணிகப் பணப்பரிவர்த்தனையும் இலவசம்
தனிநபர்களிடமிருந்து வணிகர்களுக்கு செய்யப்படும் ரூ.2,000 வரையிலான P2M பரிவர்த்தனைகளுக்கு MDR வசூலிக்கப்படாது. இதேபோல், குறிப்பிட்ட பூஜ்ஜிய-MDR திட்டத்தின் கீழ் வரும் சிறு வணிகர்களின் பரிவர்த்தனைகளும் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும்.
இதன் காரணமாக, வணிகர்களுடன் நடைபெறும் UPI பரிவர்த்தனைகளில் சுமார் 96 சதவீதம் புதிய MDR விதிமுறையால் பாதிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறு வணிகர்களுக்கு தொடர்ந்து பூஜ்ஜிய MDR
UPI QR குறியீடு மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை பணம் பெறும் தெருவோர வியாபாரிகள், அருகாமை கடைகள் உள்ளிட்ட சிறு வணிகர்கள் P2PM பிரிவின் கீழ் தொடர்ந்து பூஜ்ஜிய MDR சலுகையைப் பெறுவார்கள்.
இதன் மூலம் சிறு வணிகர்களின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் செலவு அதிகரிக்காமல் இருப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ.2,000க்கு மேல் வணிகப் பரிவர்த்தனைக்கு 0.4% MDR
தனிநபர்களிடமிருந்து வணிகர்களுக்கு செய்யப்படும் ரூ.2,000க்கு மேற்பட்ட குறிப்பிட்ட P2M பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR பொருந்தும். ரூ.75,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கான MDR அதிகபட்சமாக ரூ.300 என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த MDR தொகை அரசால் வரியாக வசூலிக்கப்படுவது அல்ல. UPI பணப்பரிவர்த்தனைச் சூழலில் செயல்படும் வங்கிகள், பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் மற்றும் UPI செயலி வழங்குநர்கள் உள்ளிட்ட பங்கேற்பாளர்களுக்கு இடையே இந்தத் தொகை பகிரப்படும் என மத்திய நிதியமைச்சகம் விளக்கியுள்ளது.
ரயில்வே உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.5 MDR
ரூ.2,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளில் ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகள் போன்ற குறிப்பிட்ட அத்தியாவசியத் துறைகளுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.5 என்ற நிலையான MDR பொருந்தும்.
மியூச்சல் பண்ட் மற்றும் பங்குச்சந்தை பரிவர்த்தனைகள்
மியூச்சல் பண்டுகள், பத்திரங்கள், பங்குத் தரகர்கள் மற்றும் டீலர்களுடன் தொடர்புடைய மூலதனச் சந்தை பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீத MDR நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை இந்த MDR வசூலிக்கப்படும்.
வாடிக்கையாளர்களிடம் MDR வசூலிக்கக்கூடாது
முக்கியமாக, MDR என்பது UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளரிடம் நேரடியாக வசூலிக்கப்படும் கட்டணம் அல்ல என்று மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. வணிகர்கள் இந்தச் செலவை வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணமாக மாற்றாமல் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், UPI செயலி வழங்குநர்கள் பிளாட்ஃபார்ம் கட்டணம் அல்லது மறைமுகமான கட்டணங்களை விதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய MDR விதிமுறையால் பொதுமக்கள் வழக்கமாக மேற்கொள்ளும் தனிநபர் UPI பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் விதிக்கப்படாது.

