கார்க் தீவு அருகே 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: மேற்காசியாவில் பதற்றம் நீடிப்பு

கார்க் தீவு அருகே ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய பதற்றம் தொடர்கிறது.

கார்க்: தீவு அருகே 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலால் சேதமடைந்த ராணுவ கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வருவதாகவும், தனது ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து கூட்டு பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள், ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல்கள் அழிக்கப்படும் காட்சிகள் அடங்கிய செயற்கைக்கோள் வீடியோவை வெளியிட்டுள்ளது.

5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் அழிப்பு

கார்க் தீவு அருகே 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு நாட்களில், ஈரான் படை அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றை இருமுறை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றது. இதனால் ஈரானின் 5 கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்தன.

ஈரானின் தாக்குதல் முயற்சிகளிலிருந்து அமெரிக்கக் கப்பல் வெற்றிகரமாகத் தப்பித்து, அப்பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியை மேற்கொண்டது. இதில் அமெரிக்கப் படையினர் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டானில் அமெரிக்க இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல்

இதற்கிடையே, அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜோர்டானில் உள்ள அமெரிக்க இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.