லண்டனில் அஜித்தை ஆரத்தழுவிய முதல்வர் விஜய்: நெகிழ்ந்த ரசிகர்கள்

லண்டன் சில்வர்ஸ்டோனில் நடிகர் அஜித்தை சந்தித்த முதல்வர் விஜய், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரின் சந்திப்பு ரசிகர்களை நெகிழச் செய்தது.

லண்டன்: லண்டனில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்வில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், அவரை ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்ட காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெற்ற லீ மென்ஸ் கோப்பை கார் பந்தய நிகழ்விலும் பங்கேற்றார்.

லீ மென்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் அஜித் அணி

தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமாரும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார். அவரது அணி லீ மென்ஸ் கோப்பை கார் பந்தயத்தின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டுக்கு நேரில் சென்றார்.

அங்கு திரண்டிருந்த லண்டன் வாழ் தமிழர்கள் முதல்வர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும், அவரிடம் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அஜித்தை நேரில் சந்தித்த விஜய்

இதனைத் தொடர்ந்து போட்டிக்குத் தயாராக இருந்த நடிகர் அஜித்குமாரை முதல்வர் விஜய் சந்தித்தார். அப்போது கார் பந்தயத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என அஜித்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பந்தயத்துக்காக காரில் அமர்ந்திருந்த அஜித்திடம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த விஜய், பின்னர் அவருடன் காரின் அருகே அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

ஓடிச்சென்று ஆரத்தழுவிய முதல்வர் விஜய்

அஜித்தை சந்தித்தபோது முதல்வர் விஜய் ஓடிச்சென்று அவரை ஆரத்தழுவிக் கொண்டார். இருவரும் அன்புடன் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் இருவரும் இணைந்து ரசிகர்களை நோக்கி கை அசைத்தனர்.

நீண்ட காலத்துக்குப் பிறகு இரு பிரபலங்களும் இவ்வாறு சந்தித்துக் கொண்ட காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சில்வர்ஸ்டோனில் தொடங்கிய கார் பந்தயம்

லீ மென்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அஜித்குமார் பங்கேற்கும் பந்தயத்தை நேரில் காணும் வகையில் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற நிகழ்வில் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத் திட்டம்

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை மேம்படுத்தும் வகையில் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கும் திட்டத்தை முதல்வர் விஜய் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டையும் அவர் பார்வையிட உள்ளார். அப்போது அங்குள்ள பந்தயச் சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் இதுபோன்ற வளாகங்களை திறம்படவும் வணிக ரீதியாகவும் நிர்வகிக்கும் நடைமுறைகள் குறித்து அவர் அறிந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் கார் பந்தயப் பங்கேற்பும், அவரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து ஆரத்தழுவிய நிகழ்வும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.