லண்டன்: சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்துக்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் ஆகியோர் மூவர்ணக் கொடியுடன் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்குவது, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுடன் முதல்வர் விஜய் பிரிட்டன் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டின் கட்டமைப்பு வசதிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
லீ மான்ஸ் கப் பந்தயத்தை தொடங்கி வைத்த விஜய்
அதனைத் தொடர்ந்து சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அஜித்குமார் உள்ளிட்ட ஓட்டுநர்கள் பங்கேற்றனர். மொத்தம் 44 கார்கள் களமிறங்கிய இந்தப் பந்தயம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
அஜித் அணிக்கு 3-வது இடம்
பரபரப்பாக நடைபெற்ற கார் பந்தயத்தின் முடிவில் நடிகர் அஜித்குமார் இடம்பெற்ற அணி 3-வது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் அஜித் அணியினர் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
பந்தயம் நிறைவடைந்த பிறகு, பந்தயக் களத்தில் முதல்வர் விஜய் மற்றும் அஜித்குமார் இருவரும் மூவர்ணக் கொடியுடன் இருக்கும் காட்சிகள் வெளியாகின. மேலும், விஜய் ரேஸ் டிராக்கில் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு புதிய முக்கியத்துவம்
தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் சில்வர்ஸ்டோன் போன்ற முன்னணி பந்தயத் தளங்களின் வசதிகளை முதல்வர் விஜய் பார்வையிட்டு வருகிறார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பது தொடர்பான தனது திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதுபோன்ற சர்வதேச தரத்திலான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டால், இந்தியாவில் நடைபெறும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வ விருந்தினராக போட்டியை தொடங்கி வைத்த நிலையில், மறுபுறம் போட்டியாளராக களமிறங்கிய அஜித்குமார் அணி 3-வது இடத்தைப் பிடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

