சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் கூடுதலாக 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று முதல் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடங்கியுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன்படி, இன்று 585 பேருந்துகளும், நாளை 1,255 பேருந்துகளும், நாளை மறுநாள் 1,030 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 650 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து கூடுதல் பேருந்துகள்
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு நாளை 240 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 240 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 105 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து தினமும் 110 பேருந்துகள்
சென்னை மாதவரத்தில் இருந்து நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
செப்.15-ம் தேதி சென்னைக்கு திரும்ப சிறப்பு ஏற்பாடு
விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப செப்.15-ம் தேதி பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி 765 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த பயணிகள் எண்ணிக்கை
- இன்று – 8,666 பயணிகள்
- நாளை – 32,171 பயணிகள்
- நாளை மறுநாள் – 18,772 பயணிகள்
- ஞாயிற்றுக்கிழமை – 11,177 பயணிகள்
- திங்கள்கிழமை – 23,740 பயணிகள்
மொத்தமாக 94,526 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

