புதுடில்லி: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த முடிவை அறிவித்துள்ளது.
இதனால், வேலைநிறுத்தம் காரணமாக வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்ற நிலை தவிர்க்கப்பட்டு, இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.
என்ன கோரிக்கைகளை முன்வைத்தனர்?
வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை வழங்க வேண்டும், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான பாரபட்சமான நடவடிக்கையை மாற்ற வேண்டும், ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முன்வைத்தனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 11-ம் தேதி முதல்கட்ட வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக, செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாள் தொடர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவு வரை நடந்த பேச்சுவார்த்தை
வேலைநிறுத்தம் தொடங்கவிருந்த நிலையில், இந்திய வங்கிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வங்கி ஊழியர் சங்கக் கூட்டமைப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது.
பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்புக்கும் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட போராட்ட நடவடிக்கைகளைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது.
இரண்டு நாள் விடுமுறை குறித்து உயர்மட்டக் குழு
அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்குவது தொடர்பாக, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்று நடவடிக்கைகளை ஆராய்ந்து முடிவு செய்ய உயர்மட்டக் குழு ஒன்றை உடனடியாக அமைக்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் வங்கிகளுக்கு வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை வழங்குவது தொடர்பான கோரிக்கை அடுத்தகட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
அதிகாரிகளின் ஊக்கத்தொகை குறித்து பேச்சு
அதிகாரிகளுக்கான செயல்திறன் ஊக்கத்தொகை திட்டமான பி.எல்.ஐ. (PLI) தொடர்பான மாற்றங்கள் குறித்தும் அரசுடன் பேசி சுமுகமான தீர்வை காண திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள பிற கோரிக்கைகள் குறித்தும் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வழக்கம்போல் செயல்படும் வங்கிகள்
பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட போராட்ட நடவடிக்கைகளையும், செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவிருந்த மூன்று நாள் வேலைநிறுத்தத்தையும் ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால், இன்று முதல் வங்கிச் சேவைகள் வழக்கமான முறையில் நடைபெறும். மாதத்தின் கடைசி வாரத்தில் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக சேவைகள் பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.





