புதுடெல்லி: டெல்லியில் போராட்டங்கள் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ஜந்தர் மந்தர் பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பதிலாக, போராட்டங்கள் நடத்த மூன்று புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டங்களால் போக்குவரத்து நெரிசலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, போராட்டங்களுக்கான இடத்தை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய போராட்ட இடங்கள் எவை?
இதன்படி, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.
எனினும், ஜந்தர் மந்தரில் தடை விதிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு மற்றும் புதிய இடங்களுக்கான விதிமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.






