தமிழகம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம்: சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்

சென்னையில் மது இல்லா தமிழகம் இயக்கத்தை சௌமியா அன்புமணி தொடங்கினார். டாஸ்மாக் கடைகளின் நேரம், எண்ணிக்கையைக் குறைக்கவும் மதுவிலக்குக் கொள்கையை உருவாக்கவும் கோரிக்கை.

சென்னை: மகாத்மா காந்தியின் 158-வது பிறந்தநாளை முன்னிட்டு, பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி, ‘மது இல்லா தமிழகம்’ என்ற புதிய இயக்கத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.

அரசியல் சார்பற்ற இயக்கம்

இயக்கத்தைத் தொடங்கி வைத்து பேசிய சௌமியா அன்புமணி, இது அரசியல் சார்பற்ற இயக்கம் என்றும், நல்ல சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மதுஒழிப்பு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை மக்களுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

மது விற்பனையைக் குறைக்க வலியுறுத்தல்

கடந்த 25 ஆண்டுகளில் தமிழக அரசின் மதுபான வருவாய் 14 மடங்கும், மதுபான விற்பனை 5 மடங்கும் அதிகரித்துள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். இளைய தலைமுறையினரை மதுப்பழக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறையவும், மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் கோரிக்கை

மதுவை படிப்படியாக ஒழிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தையும் கடைகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி வலியுறுத்தினார்.

மேலும், மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கக் கூடாது என்றும், தமிழக அரசு தனியாக மதுவிலக்குக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதுவிலக்கு விழிப்புணர்வு உறுதிமொழி

இந்த நிகழ்வில் பாமக பொருளாளர் திலகபாமா வரவேற்புரை நிகழ்த்தினார். மதுவிலக்கு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற பெண்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு மதுவிலக்கு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவரது தலைமையில் பாமகவினர் மதுவிலக்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.