முருகப்பெருமானின் சூரசம்ஹாரம் நாளை கோலாகலம்: திருச்செந்தூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவம்பர் 15) மாலை 4 மணிக்கு கடற்கரையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாவை முன்னிட்டு 4,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்புப் பேருந்துகள், மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (நவம்பர் 15) மாலை 4 மணிக்கு கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. விழாவைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 10ஆம் தேதி தொடங்கிய கந்த சஷ்டி விழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி தொடங்கியது. விழாவின் நான்காம் நாளான நவம்பர் 13ஆம் தேதி சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து சுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபத்தை அடைந்தார். மாலையில் சஷ்டி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் தங்க ரதத்தில் கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாளை மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது.

முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் இந்த நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர். ஏராளமான பக்தர்கள் கோயிலில் தங்கி கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

4,100 போலீசார் பாதுகாப்புப் பணி

சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவபிரசாத் தலைமையில் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் உள்ளிட்ட 4,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உயர்கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோரப் பகுதிகளில் மீட்புப் படகுகளுடன் கடலோர பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

மருத்துவம், தீயணைப்பு மற்றும் அவசரகால ஏற்பாடுகள்

பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோயில் வளாகத்தில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாழிக்கிணறு பேருந்து நிறுத்தம் அருகே தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனமும், 108 ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளன.

விழாவின்போது ஏற்படும் அவசரநிலைகளைச் சமாளிக்க மருத்துவ மற்றும் மீட்புப் பணிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களுக்காக சிறப்புப் பேருந்துகள்

சூரசம்ஹார விழாவைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், விழாவின்போது சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

நவம்பர் 16ஆம் தேதி திருக்கல்யாணம்

சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி இரவு திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனுடன் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோயில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.