வெற்றிப் பயண திட்டம்: எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் உள்ளிட்ட அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லலாம்

அக்.2 முதல் தொடங்கும் வெற்றிப் பயண திட்டத்தில் பெண்கள் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயண’ திட்டம் அக்டோபர் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே சாதாரண நகரப் பேருந்துகளில் வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா பயண வசதி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் உள்ளிட்ட கூடுதல் அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 2 முதல் வெற்றிப் பயணம்

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்வர் விஜய் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ், நகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதி பெறுகின்றனர்.

எவ்வளவு தூரம் இலவசமாக பயணிக்கலாம்?

அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகள் பொதுவாக 30 முதல் 100 கி.மீ. வரையிலும், எல்.எஸ்.எஸ். பேருந்துகள் 30 முதல் 40 கி.மீ. வரையிலும், டீலக்ஸ் பேருந்துகள் 30 முதல் 50 கி.மீ. வரையிலும் இயக்கப்படுகின்றன.

இதனால், எக்ஸ்பிரஸ் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி பெண்கள் ஒரு பேருந்தில் பயணிக்கும் தூரத்தைத் தாண்டியும், தேவையான இடங்களில் பேருந்துகளை மாற்றி நீண்ட தூரப் பயணத்தை கட்டணமின்றி தொடர முடியும்.

உதாரணமாக சென்னையில் இருந்து பயணிக்கும் ஒருவர் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெவ்வேறு பேருந்துகளை மாற்றி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நகரங்களுக்கு இடையிலும் இலவச பயணம்

வெற்றிப் பயண திட்டத்தின் கீழ், நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இதன்படி திருச்சி - திண்டுக்கல், தஞ்சாவூர் - நாகப்பட்டினம், தஞ்சாவூர் - வேளாங்கண்ணி, திண்டிவனம் - விழுப்புரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இலவச பயண வசதி கிடைக்கும்.

அதேபோல், விருத்தாசலம் - திருச்சி, கோவை - பழனி, பழனி - திண்டுக்கல், கோவை - ஈரோடு, ஈரோடு - சேலம், மதுரை - விருதுநகர், விருதுநகர் - கோவில்பட்டி, திருநெல்வேலி - நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

திருநங்கைகளுக்கும் கட்டணமில்லை

பெண்களுடன் திருநங்கைகளும் வெற்றிப் பயண திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இதன் மூலம் அரசுப் பேருந்து சேவையை அதிக அளவில் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

12,692 அரசு பேருந்துகளில் வசதி

வெற்றிப் பயண திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 12,692 அரசு பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் கட்டணமின்றி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தினமும் சுமார் 84 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என்றும், ஒரு நாளில் 16 லட்சத்துக்கும் அதிகமான ஒரு வழிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பெண்களின் அன்றாட வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கான அரசு பேருந்து பயணம் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.