சென்னை: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தற்போது 1980-களின் நினைவுகளை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்களை உருவாக்கிப் பகிரும் 80ஸ் போட்டோ டிரெண்ட் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்களுடன் சேர்ந்து திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்களும் இந்த டிரெண்டில் இணைந்துள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பத்தால் புதிய போட்டோ டிரெண்ட்கள்
சமூக வலைதளங்களில் அவ்வப்போது புதுப்புது புகைப்பட டிரெண்ட்கள் உருவாகி வைரலாவது வழக்கம். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஒருவர் விரும்பும் காலகட்டம் அல்லது குறிப்பிட்ட தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்களை உருவாக்குவது எளிதாகியுள்ளது.
இதற்கு முன்பு ChatGPT உள்ளிட்ட ஏஐ கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ‘ஜிப்லி’ பாணி அனிமேஷன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பலரும் தங்களது புகைப்படங்களை அனிமேஷன் பாணியில் மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இப்போது 80ஸ் காலத்து புகைப்படங்கள்
அந்த வரிசையில் தற்போது 1980-களின் காலகட்டத்தை நினைவுபடுத்தும் புகைப்படங்களை உருவாக்கிப் பகிர்வது இன்ஸ்டாகிராமில் பிரபலமாகியுள்ளது. பழைய திரைப்பட கதாபாத்திரங்கள், குடும்ப புகைப்பட ஆல்பங்கள் மற்றும் விண்டேஜ் ஸ்டுடியோ புகைப்படங்களைப் போன்ற தோற்றத்தில் பலரும் தங்களது படங்களை மாற்றி வருகின்றனர்.
80ஸ் காலத்து சட்டைகள், பெல்ஸ் பேன்ட், மீசை, அக்காலகட்டத்துக்கே உரிய ஹேர்ஸ்டைல் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தப் புகைப்படங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் பழைய கால புகைப்படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வை இந்த டிரெண்ட் ஏற்படுத்தி வருகிறது.
திரை பிரபலங்களும் இணைந்தனர்
இந்த டிரெண்டில் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு திரைப் பிரபலங்களும் பங்கேற்று தங்களது 80ஸ் தோற்றப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகைகள் ப்ரீத்தி முகுந்தன், அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோரும், நடிகர் அசோக் செல்வன் உள்ளிட்டோரும் இந்த டிரெண்டில் இணைந்துள்ளனர்.
இதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த டிரெண்டில் பங்கேற்றுள்ளது. அணியின் வீரர்களை பழைய கால தோற்றத்தில் சித்தரிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
80ஸ் டிரெண்டில் பங்கேற்ற பிரபலங்கள்
அரசியல் தலைவர்கள்
- பியூஷ் கோயல்
- கிரண் ரிஜிஜு
- ஹிமந்த பிஸ்வா சர்மா
- சிவராஜ் சிங் சவுகான்
நடிகர்கள்
- சித்தார்த் மல்ஹோத்ரா
- சோயிப் இப்ராஹிம்
- ஸ்ரீனிஷ் அரவிந்த்
- அகில் மாரார்
நடிகைகள்
- கியாரா அத்வானி
- பரினீதி சோப்ரா
- அதா சர்மா
- அமீஷா படேல்
விளையாட்டு வீரர்கள்
- இர்பான் பதான்
- விராட் கோலி
- கே.எல். ராகுல்
- பிரக்ஞானந்தா
‘ADD YOURS’ மூலம் வைரல்
இன்ஸ்டாகிராமில் உள்ள ‘ADD YOURS’ ஸ்டிக்கர் வாயிலாக இந்த 80ஸ் புகைப்பட டிரெண்ட் உலகம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது. ஒருவர் பகிரும் புகைப்படத்தைத் தொடர்ந்து, மற்றவர்களும் தங்களது 80ஸ் பாணி புகைப்படங்களை இணைத்து பகிர்ந்து வருவதால் இந்த டிரெண்ட் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது.
ஏஐ தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்களின் இணைப்பு மூலம் உருவாகியுள்ள இந்த புதிய டிரெண்ட், தற்போதைய தலைமுறையினருக்கு பழைய காலத்தின் ஆடை, தோற்றம் மற்றும் புகைப்பட பாணியை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

