தமிழகத்தில் 21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிட்ட சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 9) விசாரணைக்கு வருகிறது.
தகுதி நீக்க நடவடிக்கையின் பின்னணி
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெக அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இது கட்சியின் கொறடா உத்தரவை மீறியதாகக் கூறி, அவர்களுக்கு எதிராகத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த 25 பேரில் நான்கு பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்தனர். எஞ்சிய 21 பேர் மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிடுமாறு கட்சித் தலைமை கோரியது. இதை ஏற்று, 21 எம்.எல்.ஏக்களுக்கு எதிரான நடவடிக்கையைச் சபாநாயகர் கைவிட்டார்.
உயர் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் பி.வி. செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 21 எம்.எல்.ஏக்களின் செயல்பாட்டை கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை என்ற அடிப்படையில் மனுவைத் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, செல்வகுமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.





